சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று பாதிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூசன் நேற்று (ஜூன்.3) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினார்.
தொடர்ந்து இன்று (ஜூன் 4) சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கரோனா படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் "நாடு முழுவதும் ஒரு வாரமாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் சில நாள்களாக கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆகவே, அந்தந்த மாவட்ட அலுவலர்கள் மண்டல அளவிலும், தெரு அளவிலும் கண்காணிக்க வேண்டும். அதோடு எட்டு மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தப் பகுதிகளில் கரோனா கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக அலுவலர்கள் எடுக்க வேண்டும்.