சென்னை ஐஐடியில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட 194 பேரில் குணமடைந்த 28 மாணவர்கள் இன்று கிண்டி கிங் மருத்துவமனையில் இருந்து, ஐஐடியில் உள்ள பத்ரா விடுதிக்கு தனிமைப்படுத்தப்பட அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த மாணவர்களை சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேருந்தில் அனுப்பி வைத்தார்.
161 விடுதிகளில் கரோனா பரிசோதனை:
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "சென்னை ஐஐடியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் குணமடைந்துள்ளனர். சென்னையில் உள்ள மற்ற பகுதியிலும் தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறோம். சென்னை மாநகராட்சியில் 97 கல்லூரிகளில் 161 விடுதிகளில் பரிசோதனை செய்துள்ளோம். மாணவர்களுக்குத் தொடர்ந்து 15 நாள்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்யப்படுகிறது.
210 பேருக்குக் கரோனா:
இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முடிவுகள் வந்துள்ளன. டிசம்பர் 1ஆம் தேதி முதல் நேற்று (டிச.17) வரையில் 210 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் 171 மற்றும் 174ஆவது வட்டத்தில் தான், 210 பேரில் 116 பேர் உள்ளனர். காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொது சுகாதாரத்துறை விதிமுறைகளின்படி, கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளன. அறிகுறிகள் உள்ளவர்கள் பரிசோதனை செய்துகொள்ளவும் ஐஐடியில் முகாம் அமைக்கப்பட்டுள்ளன.