சென்னை: ஆந்திராவில் விபத்து ஒன்றில் காயம்பட்டவர்களுக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அறுவை சிக்ச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பெற்றுவரும் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "ஆர்டிபிசிஆர் சோதனைகள் முழு வீச்சில் நடத்துவதாலும் தொடர்ந்து கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திவருவதாலும் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துவருகிறது.
தமிழ்நாட்டில் மருத்துவத்துறையின் தரத்தை அறிந்தே ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு வந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். பண்டிகை காலங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைகள், வணிக வளாகங்களில் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். தற்போது, காய்கறி சந்தைகளில், சமூக இடைவெளியின்றி மக்கள் நடமாடுவதை காணமுடிகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவு இருப்பவர்கள் கடைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்வதே இறப்பு எண்ணிக்கை குறைய முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக நேற்றைய (அக்டோபர் 23) தினம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கரோனா தொற்றால் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார்.