சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இன்று தமிழ்நாடு பெருமை கொள்ளத்தக்க நிகழ்வு நடந்துள்ளது. உலக உணவுப் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இன்று டெல்லியில் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசுக்கு உணவுப் பாதுகாப்புத்துறையில் நமது செயல்பாடுகளைப் பாராட்டி, பெரிய மாநிலங்களில் முதல் மாநிலமாக திகழ்வதற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக உணவுப் பாதுகாப்பு சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்பதால் இந்த விருது கிடைத்துள்ளது. இந்திய அளவில் உணவு பராமரிப்புப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்ட 150க்கும் அதிகமான மாவட்டங்களில் 75 மாவட்டங்களை விருதுக்கு தேர்வு செய்துள்ளனர். அதில் தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்குப் பரிசு கிடைத்துள்ளது. தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தில் 32 புரதச் சத்துகள் அடங்கிய மிக்ஸ் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அதனை ஆவின் மூலம் வழங்கலாம் என கருத்து கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநில திட்டக்குழு சார்பில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கடிதம் மூலம் ஏற்கெனவே கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், ஆவினில் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கப்படுவது இல்லை. இதனை அறிக்கையாக தர ஆவின் பரிசீலித்து வருகிறது.
கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஹெல்த் மிக்ஸ்-ஐ ஆவினால் தயாரித்து வழங்க முடியுமா? வாய்ப்பு இருந்தால் தயாரித்து கொடுங்கள் என ஆவின் நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். அதனை பரிசீலிப்பதாக கூறி உள்ளனர். அவர்கள் தயாரித்து வழங்கினால் சந்தோசமாக பெற்றுக் கொண்டு வழங்குவோம்’ எனக் கூறினார்.