சென்னை: சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள கோட்டூர் ஜிப்ஸி காலனியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முகாமினை நகர்ப்புற வளர்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் தடுப்பூசிகள் செலுத்துவதில் மிகப் பெரிய அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.
விழிப்புணர்வை ஏற்படுத்திய நல்ல நோக்கம் நிறைவேறி இருப்பதால், தமிழ்நாட்டில் இதுவரை 1 கோடிய 62 லட்சத்து 61ஆயிரத்து 985 பேருக்குக் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கையிருப்பில் 7 லட்சத்து 53ஆயிரத்து 280 தடுப்பூசிகள் உள்ளன.
தடுப்பூசி முகாம்:
முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி ஜூலை மாதத்துக்குரிய தொகுப்பினை விரைந்து பெறுவதற்கு சுகாதாரத் துறையின் செயலாளரை டெல்லிக்கு அனுப்பி இரண்டு நாள்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை அலுவலர்களைச் சந்தித்து வலியுறுத்தியதால், தமிழ்நாட்டிற்குத் தடுப்பூசிகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள கோட்டூர் ஜிப்ஸி காலனியில் 200க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்குத் தொழில் நிமித்தமாக நரிக்குறவர்கள் சென்றுவருவதால், அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளித்திட வேண்டுமென நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு வலியுறுத்தியதன் அடிப்படையில், அவரது முன்னிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து தடுப்பூசி முகாமை இப்பகுதியில் தொடங்கியுள்ளது.
33 மாவட்டங்களில் கள ஆய்வு:
தமிழ்நாடு முழுவதும் இருக்கிற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நானும், சுகாதாரத் துறையின் செயலாளரும் சென்று கள ஆய்வை நடத்தியிருக்கிறோம். மருத்துவமனைகளில் இருக்கக்கூடிய டயாலிசிஸ், கார்டியோலாஜி போன்ற பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு செய்துள்ளோம். கரோனா நோயைத் தாண்டி பிற நோய்களுக்கும் சிறப்பான கிசிச்சையளிக்க மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தியிருக்கிறோம்.