சென்னை:எழும்பூர் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் 0% கஞ்சா பயிர்:அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு அருகில் போதைப் பொருட்கள் விற்கப்படுகிறது என்ற புகார் இருந்துக் கொண்டு இருக்கிறது. எனவே முதலமைச்சர், கடந்தாண்டு ஒரே நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் உறுதிமாெழி ஏற்றனர். இது உலகச்சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கின்ற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், போதை பொருள் பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் வகையிலும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. போதைப் பொருட்களை விற்பதை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் உணவு பாதுகாப்புத்துறையை சேர்ந்த அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
கஞ்சா என்பதை தமிழ்நாட்டில் பூஜ்ஜியம் என்ற நிலையில் அழித்துள்ளோம் என்ற ஒரு சிறப்பான இடத்தை காவல்துறை வைத்துள்ளது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக, தெலங்கானா, கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வரும் போதை வஸ்துக்களை தடுப்பதற்கும் காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவின் டிஜிபிக்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் ஆந்திராவில் ஒரு பகுதியில் 6 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா பயிரிடப்படுகிறது.
4 ஆயிரம் கோடி கஞ்சாப்பயிர்கள் அழிப்பு:மேலும் அதனை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தனர். தமிழ்நாட்டின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக 4 ஆயிரம் கோடி கஞ்சாப் பயிர்களை ஆந்திரா அரசு அழித்து ஒழித்தது. காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பாேதைப் பொருட்கள் விற்பனையை தடுத்து வருகிறது. பள்ளிக்கு அருகாமையில் இதுபோன்ற போதைப் பொருட்கள் இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று” என்றார்.
ஐஸ்கிரீமில் மது: கோயம்புத்தூரில் மிகவும் நெருக்கடியான ஒரு இடத்தில் ரோலிங் டப் கபே என்ற ஒரு கடை இருந்தது. அந்தக் கடையில் விற்கப்படும் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்கப்படுவதாக தகவல் வந்தது. ஆய்வில் மதுபானம் கலந்து ஐஸ்கிரீம் தயாரிப்பது உண்மை என கூறினார்கள். அதனைத் தொடர்ந்து அந்தக்கடை சீல் வைத்து மூடப்பட்டது. அந்தக் கடையை நீதிமன்றம் சென்றும் திறக்க முடியவில்லை.