சென்னை:மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் யுனிசெஃப் நிறுவனத்துடன் இணைந்து கரோனா பரப்புரை வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
கரோனா விழிப்புணர்வு
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மா. சுப்பிரமணியன் கூறுகையில், “கரோனா தொற்று பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. கரோனா தொற்றினால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தமிழ்நாட்டில் இரண்டாவது அலை முற்றுக்கு வந்துகொண்டிருக்கிறது என்ற நிலை இருந்தாலும், தொடர்ந்து மக்களைப் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அறிவுறுத்த வேண்டியது அரசின் கடமை.
பொதுமக்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பரப்புரைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சென்னையில் பத்து வாகனங்களில் பரப்புரை செய்யப்படவுள்ளது.
மேலும், கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் இந்தப் பரப்புரையின் மூலம் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொற்றுக்கு ஒரே தீர்வு தடுப்பூசிதான். எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.
தடுப்பூசி விழிப்புணர்வு
மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு சுகாதாரத் துறை கடந்த இரண்டு மாதங்களாகத் தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. நீலகிரியிலுள்ள பழங்குடியினர் அனைவரும் ஜூன் மாதம் இறுதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
அதேபோல் நீலகிரியிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 100 விழுக்காட்டினரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஒன்றிய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வர வர மக்களுக்கு விரைந்து செலுத்தும் பணிகளை வேகமாகச் செய்துவருகிறோம்” எனத் தெரிவித்தார்.
‘திமுக அரசு மக்களை தடுப்பூசி செலுத்துவதில் வஞ்சிக்கும் அரசாக இருக்கிறது’ என்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மா. சுப்பிரமணியன், “மே 7ஆம் தேதிவரை அதிமுக ஆட்சியில் இருந்தது. தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஐந்து மாத காலம் அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டார்கள்.