தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துவருகிறது. ஆனால், அதே நேரத்தில் கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் மாறியுள்ளன. பெரும்பாலானவர்கள் சாதாரண காய்ச்சல் எனச் சில நாள்கள் மாத்திரை உட்கொள்கின்றனர்.
அதன் பின்னர், அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்கின்றனர். அப்பொழுது, அவர்களுக்கு சிடி ஸ்கேன் எடுக்கும்பொழுது கரோனா தொற்று உறுதிசெய்யப்படுவதுடன், நுரையீரலில் பாதிப்பு அதிக அளவில் இருப்பது தெரியவருகிறது.
இந்நிலையில், பொது சுகாதாரத் துறை இயக்குநர் அனைத்து துணை இயக்குநர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், "அரசு, தனியார் சிடி ஸ்கேன் மையங்களில் நோயாளிகளுக்கு சிடி ஸ்கேன் எடுக்கும் விவரத்தினை பெற்று தினமும் மாநில பேரிடர் இயக்க கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இதன்மூலம் கரோனா தொற்று தொடர்ந்து பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். சிடி ஸ்கேன் மையங்கள் இது போன்ற விவரங்களை தர மறுத்தால் பொது சுகாதார பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே, இது குறித்து அறிவிப்பு வழங்கப்பட்ட பின்னரும் இதுவரை எந்தவித அறிக்கையும் துணை இயக்குநர்களிடமிருந்து வரவில்லை. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்