சென்னை:வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் விடிய விடியப் பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (நவ.7) கனமழையால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பள்ளமான பகுதியில் தேங்கிய வெள்ளநீரை அகற்றுவதற்குத் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "சென்னையில் 12 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்துள்ளது. மாநகராட்சி, குடிநீர், கழிவுநீர் வாரியம் காலையில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. சைதாப்பேட்டை ஒட்டிய அடையாற்றில் தடுப்புச்சுவர் கட்டும் பணி ஒரு அளவுக்கு நிறைவு பெற்றிருக்கிறது. இதன் காரணமாக மழை நீர் வீடுகளுக்குள் புகாது.