சென்னை:மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் சார்பில் உலக மகளிர் தின விழா, சென்னை - தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நல்வாழ்வுக்குழுமத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மருத்துவப்பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ காப்பகத்தில் இருந்து முதல்முறையாக பாராஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அதற்கான கோப்பையைக்காண்பித்து அமைச்சரிடம் வாழ்த்துகளைப் பெற்றனர்.
தடுப்பூசி செலுத்துவதில் மக்களின் அலட்சியப்போக்கு
இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'கரோனா பெருந்தொற்று நேற்று(மார்ச் 7) 158 என மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. அண்டை நாடுகளில் தொற்று பாதிப்புகள் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். 1.30 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.
கடந்த மெகா தடுப்பூசி முகாமில் 6 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டது வருத்தமளிக்கிறது. பல்வேறு ஏற்பாடுகள், அறிவிப்புகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். வரும் சனிக்கிழமை நடைபெறும் 24ஆவது மெகா தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தற்பொழுது 495 பேர் மட்டுமே சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற மருத்துவமனைகளில் இடங்கள் காலியாக உள்ளன.