சென்னை:சைதாப்பேட்டையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) செலுத்தும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "தமிழ்நாட்டில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு இதுவரை 92,522 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குள் தமிழ்நாட்டில் 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தத் தகுதி பெறுவார்கள்.
இதில் தகுதி உடையவர்கள் உடனடியாக பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும். இனி ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் தமிழ்நாட்டில் 600 இடங்களிலும், சென்னையில் 160 இடங்களிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெறும். சனிக்கிழமை அன்று வழக்கமான மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.
நோய்த் தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் பரவல் அதிகமாக இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்காக ஏராளமானோர் கிராமத்துக்கும் சொந்த ஊருக்கும் சென்று உள்ளனர். அங்கு அவர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் பொது இடங்களில் கூடி கொண்டாடி இருப்பார்கள். எனவே கரோனா பாதிப்பு என்பது 3 நாட்களில் தெரியவரும்.
முதுகலை படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான மருத்துவ கலந்தாய்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், தீர்ப்பு தெரிந்தவுடன் கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். கரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் தொலைபேசி என்னைத் தவறாகக் கொடுப்பதும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் தொலைப்பேசி அழைப்புகளை எடுக்காமல் இருப்பதும் அவர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.