தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பள்ளிக்கூட பணியாளர்கள், ஆசிரியர்களின் குடும்பத்தாருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (ஆகஸ்ட் 27) தொடங்கியது.
இந்த முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "சென்னையில் ஆசிரியர் அல்லாத பள்ளிக்கூட பணியாளர்களில் 89.32 விழுக்காடு நபர்களுக்கும், ஆசிரியர்களில் 90.11 விழுக்காடு நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் 100 விழுக்காடு ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலை ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் அரசு சார்பில் இதுவரை இரண்டு கோடியே 81 லட்சத்து 31 ஆயிரத்து 409 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கும் என மொத்தமாக மூன்று கோடியே ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 410 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.