சென்னை: ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா பெருந்தொற்று சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வார்டில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "இந்தியா முழுவதும் கரோனா தொற்றை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து மாக் ட்ரில் நடத்த மத்திய அரசு தெரிவித்து இருந்தது. அதன் அடிப்படையில் இன்றும், நாளையும் அனைத்து மருத்துமனைகளிலும் இந்த மாதிரி பயிற்சி நடைபெருகிறது. தற்போது சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஆய்வு செய்தேன். மற்ற மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர்கள் இந்த மாதிரி பயிற்சியை ஆய்வு செய்வார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பெருந்தொற்றுக்கு இந்திய அளவில் ஒரு நாள் பாதிப்பு 5000 -திற்கும் மேல் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, டில்லியில் அதிகளவில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 329 பேருக்கு பாதிப்பு உள்ளது. கரோனா தொற்று பாதிப்பு உள்ளானவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று மருந்து எடுத்துக் கொண்டு வீட்டில் தனிமை படுத்திக்கொண்டு இருக்கின்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுவது தற்போது குறைவாகத்தான் இருக்கிறது.
ஏற்கனவே, இரண்டாம் அலையில் டெல்டா, டெல்டா பிளஸ் பாதிப்பில் தீவிரமடைந்து உடனடியாக ஆக்சிஜன் தேவை இருந்தது. பின்னர் மூன்றாம் அலையில் பாதிப்பின் தீவிரம் குறைந்தது. அடுத்தடுத்த அலைகளிலும் பாதிப்பு குறைவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது வந்துள்ள 4 ஆம் அலையில் பாதிப்புகள் குறைவாகத்தான் இருக்கும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசி, முக கவசங்கள், தனி நபர் பாதுகாப்பு கவச உடை எவ்வளவு உள்ளது என்பதையும், ஆக்சிஜன் ஜெனரேட்டர், திரவ நிலை ஆக்சிஜன் கையிருப்பு ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தற்போது, 64,281 படுக்கைகள் தயாராக உள்ளது. அவற்றில் 33,624 ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக உள்ளன. 24,061 ஆக்சிஜன் கான்ஸ்டன்ஸன், 130 ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள், 267 மெட்ரிக் டன் திரவ நிலை சேமிப்பு களன்கள் உள்ளது.