சென்னை:சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று (ஜூன் 22) திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை மாநகராட்சி சார்பில் இயங்கி வரும் மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும் திறம்பட செயல்பட்டு வருகிறது. கல்வித்தரம் மட்டுமல்லாது கட்டமைப்பும் திறம்பட மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் மூலமாக 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க தயக்கம் காட்டிய பெற்றோர்கள் மத்தியில் தற்பொழுது, மாநகராட்சிப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்குப் போட்டி நிலவுகிறது. அந்த அளவிற்கு கல்வியின் தரம் அதிகரித்து சேர்க்கை அதிகரித்துள்ளது.
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வரும் மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில், இந்தப் பள்ளியில் 30 லட்சம் ரூபாய் செலவில் சிறந்த கணினி ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பள்ளியில் படித்த மாணவி, நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர உள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி இருக்கும் இடத்தை உயர் நீதிமன்றத்திற்கு வேண்டும் என்று கேட்டு இருந்தனர்.
அதற்காக மாணவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டு அங்கு தங்க வைத்திருக்கின்றனர். நான் அங்கு இருக்கக்கூடிய மாணவர்களை கலந்து ஆலோசித்த பிறகு புதிதாக கட்டி வருகிறோம். மேலும் ஒரு வருடத்திற்குள் புதிதாக கட்டப்பட்டு வரும் விடுதி மாணவர்களுக்காக திறந்து வைக்கப்படும். மேலும், உயர் நீதிமன்றத்தின் கட்டமைப்பையும் மேம்படுத்துவது மற்றும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. எனவே, கலந்தாலோசித்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “அவருக்கு நேற்றுதான் அறுவை சிகிச்சை என்பது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நலமாக இருக்கிறார். அவர் நேற்று மாலையே சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவப் பிரிவில்(post operation ward) மாற்றப்பட்டார். அவர் எத்தனை நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதெல்லாம் மருத்துவர்கள் தான் கூற வேண்டும்.