சென்னை:சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அரங்கில், இன்று(ஜூன் 13) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், யோகா மற்றும் இயற்கை மருத்துவ தனியார் கல்லூரிகளுடன் இட ஒதுக்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையகரத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் 17 சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் அரசின் ஒதுக்கீடாக 993 இடங்களும், 2 அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 160 இடங்கள் என ஒட்டு மொத்தமாக அரசு சார்பில் 1,153 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 557 இடங்கள் என 1,710 இடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வுக் குழுவின் சார்பில் நிரப்பப்பட்டு வருகிறது.
தனியார் கல்லூரிகளை சேர்ந்தவர்கள் தங்களது குறைகளை தெரிவித்து இருந்தனர். அதனை சரிசெய்வது குறித்து பேசினோம். இயற்கை மற்றும் யோகா மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு ஆகஸ்ட் மாதம் வகுப்புகள் துவங்கும். ஆனால், நீட் தேர்வினால் மாணவர் சேர்க்கை பிப்ரவரி வரையில் தள்ளி போகிறது என்று தனியார் கல்லூரிகள் கூறின. விசாரித்ததில் நீட் தேர்வுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என தெரிகிறது. எனவே, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்ததும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் வளர்ச்சிக்கு இந்த கூட்டம் உதவும். மேலும், இந்தப் படிப்புக் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என்று கூறினார்.
அரசு மருத்துவர்கள் தொடர்ந்து உயிரிழப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "மன அழுத்தம் அனைவருக்கும் இருக்கலாம், தேவையற்ற பீதியை கிளப்ப வேண்டாம். மருத்துவர்கள் பணி சுமையால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பது உண்மை இல்லை. மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 1,021 மருத்துவ பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தமிழ் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.
அதன் மீதான தீர்ப்பு வந்துள்ளதால், தேர்வு எழுதிய மருத்துவர்களின் தமிழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களை பணியில் நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல், 980 மருந்தாளுநர் பணிக்கு 43 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான இடங்களையும் நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. காலி பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.