தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காபந்து அரசு ஆட்சியில்தான் ஆக்சிஜன் பிரச்சினையால் இறப்பு - மா.சு. தகவல் - health minister ma subramanian on oxygen shortage

காபந்து அரசு ஆட்சியின்போது ஆக்சிஜன் கொண்டுசெல்வதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மருத்துவமனையில் உயிரிழப்பு ஏற்பட்டதே தவிர, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ma subramanian

By

Published : Jul 23, 2021, 4:48 PM IST

சென்னை:தனியார் மருத்துவமனைக்கு ஒதுக்கப்படும் கரோனா தடுப்பூசியை, தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி உதவியுடன் பயன்பாட்டிற்கு கொண்டுவருதல் குறித்த மண்டல அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடந்தது.

இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையேற்றார். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம், திருப்புத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், மருத்துவமனை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சுமார் 2.25 கோடி ரூபாய் நிதியுதவி செய்ய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

கரோனா தடுப்பூசியே பேராயுதம்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "கரோனா பேரிடருக்கு தற்போதைய தேவை தடுப்பூசிதான். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களுக்கு ஆர்வம் இருந்தாலும், கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் போடத் தயங்குகின்றனர்.

தனியார் மருத்துவமனையிலும் இலவச தடுப்பூசி போடும் பணியினை சி.எஸ்.ஆர். திட்டம் மூலம் செயல்படுத்தவுள்ளோம். தனியார் மருத்துவமனைகள் 18.7 லட்சம் டோஸ் தடுப்பூசியை வாங்கியுள்ளன, அவற்றில் 13.31 போடப்பட்டுள்ளன. சுமார் 5.38 லட்சம் டோஸ் கையிருப்பில் உள்ளது.

ஜூலை மாதத்தில் 17 லட்சம் தடுப்பூசி, ஒன்றிய அரசின் தொகுப்பிலிருந்து தர தயாராக இருந்தும், சுமார் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. 12 லட்சம் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு வர வேண்டியுள்ளது.

இலவச தடுப்பூசி

சி.எஸ்.ஆர். திட்டம் மூலம் தொழில் நிறுவனங்கள் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட்டால், மக்களை எளிதில் தடுப்பூசி சென்றடையும். இந்தத் திட்டத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்படும்போது, எந்த மருத்துவமனையில் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என்பது குறித்து சுகாதாரத் துறையின் இணையதளத்தில் குறிப்பிடப்படும்.

நிதி உதவி செய்யபவர்களின் விவரங்களும் வெளியிடப்படும். ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முன்வரலாம். தனியார் மருத்துவமனைகளுக்கு ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்படும் 25 விழுக்காடு தடுப்பூசியை வீணாக்காமல் மக்களுக்குப் போட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணியை வரும் திங்கள், செவ்வாய் ஆகிய கிழமைகளில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு தங்கி, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அந்தப் பணியைத் தொடங்கிவைக்க இருக்கிறேன்.

கர்ப்பிணிகள் உள்பட யாரையும் வற்புறுத்தி தடுப்பூசி போடும் நிலை தமிழ்நாட்டில் இல்லை. மாறாக மக்கள்தான் தடுப்பூசி கேட்டு வலியுறுத்திவருகின்றனர்.

தமிழ்நாட்டில் 1.16 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. வீடுகள் இல்லாத 707 நபர்களைக் கண்டறிந்து தடுப்பூசி போட்டுள்ளோம். டெங்கு, ஜிகா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆக்சிஜன் பற்றாக்குறை

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மே 7ஆம் தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் செங்கல்பட்டில் 13 பேர் இறந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடித்தில் அதற்கு இரண்டு நாள்கள் முன்னர் விபத்து நடந்ததாகக் கூறியுள்ளார். மே 4ஆம் தேதிதான் விபத்து நடந்துள்ளது. ராஜிவ் காந்தி, செங்கல்பட்டு, வேலூர் மருத்துவமனைகளில் நோயாளிகள் இறந்தபோது காபந்து ஆட்சிதான் இருந்தது.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறக்கவில்லை, ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாகவே இறந்துள்ளதுள்ளனர். எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு காபந்து ஆட்சியில்தான் ஆக்சிஜன் தொழில்நுட்பக் கோளாறால் இறப்பு ஏற்பட்டது என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

அரசு மருத்துவர்கள் ஊதியப் பிரச்சினை

அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடியபோது, முதலமைச்சர் நேரில் சென்று பார்த்தார் என்பது உண்மைதான். ஆட்சி அமைந்த பின்னர் மருத்துவர்களை அழைத்துப் பேசிவருகிறோம்.

கரோனா தொற்றுக் குறைந்த பின்னர் அவர்களின் கோரிக்கைகளை அந்தந்தத் துறைத் தலைவர்களுடன் கலந்துபேசி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பிராணவாயு பற்றாக்குறை இல்லை - மருத்துவக் கல்வி இயக்குநர் உறுதி!

ABOUT THE AUTHOR

...view details