சென்னை:உலக மக்கள் தொகை தினத்தையொட்டி இன்று(ஜூலை 11) சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், சுமார் 500 செவிலிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அரசு பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவ கல்வி இயக்குனர் சாந்தி மலர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "37வது உலக மக்கள் தொகை தினத்தையொட்டி இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 4,000 பேருந்துகளில் 14 வகையான வாசகங்களை ஒட்டும் பணி தொடங்கப்பட்டது. இன்று முதல் அவை பேருந்துகளில் இடம்பெறும். முன்னர் தமிழ்நாட்டில் 41 சதவீதம் பேர் மட்டுமே பேருந்துகளை பயன்படுத்தினர். மகளிர் இலவச பயணம் அறிவிக்கப்பட்ட பின்னர் 60 சதவீதம் பெண்கள் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதனால்தான் மகளிர் அதிகம் பயணிக்கும் பேருந்துகளில் விழிப்புணர்வு வாசகங்களை ஒட்டியுள்ளோம். துண்டு பிரசுரங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் வெளியிடப்பட்டன.