தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 13, 2021, 5:28 PM IST

ETV Bharat / state

விரைவில் மக்களைத் தேடி மருத்துவம் - மா. சுப்பிரமணியன்

மக்களைத் தேடி மருத்துவம் என்ற பிரத்யேகத் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்னும் 15 நாள்களுக்குள் தொடங்கிவைப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார்.

health minister ma subramanian
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார துணை இயக்குநர்கள், மாநகர மருத்துவ அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று (ஜூலை13) நடந்தது.

இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்டு, அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் கணக்கெடுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கரோனா தொற்று காலத்தில் வழங்கப்பட்ட சான்றிதழில் உள்ள குளறுபடிகளை நீக்குவது குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

தடுப்பூசி விழிப்புணர்வு

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "இன்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடுதவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, காலதாமதம் இல்லாமல் தடுப்பூசி போடுவது குறித்து பேசப்பட்டது. தடுப்பூசி போடும் இடத்தில் கூட்டம் சேராமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகப்பேறு மருத்துவ சேவை

அரசு மருத்துவமனையில் 60 விழுக்காடாக இருக்கும் மகப்பேறு மருத்துவ சேவையை கூடுதலாக 10 விழுக்காடு உயர்த்துவது குறித்து பேசப்பட்டது. இங்கிலாந்தில் கரோனா மூன்றாம் அலை தொடங்கியுள்ளது. அங்கு அனைவருக்கும் தடுப்பூசி போட்டதால், தொற்று அதிகரித்தாலும் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு இதுவரை ஒரு கோடியே 70 லட்சத்து 38 ஆயிரத்து 460 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றில் ஒரு கோடியே 66 லட்சத்து 41 ஆயிரத்து 262 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்று மாநிலத்திற்கு 1.5 லட்சம் கோவிஷீல்டு, ஒரு லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன.

ஒன்றிய சுகாதார அமைச்சர் சந்திப்பு

சுமார் 6.5 லட்சம் கையிருப்பில் உள்ளது. இவை இன்றும் நாளையும் போடப்படும். ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்தித்து தடுப்பூசி தட்டுப்பாடு, எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல், 11 புதிய மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்து பேச உள்ளோம்.

மக்களைத் தேடி மருத்துவம்

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றிக்கு மாத்திரைகள் இருந்தாலும், ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் மாத்திரைகளை வாங்கிச் செல்லவில்லை. மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் யார் யாருக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்றவை இருக்கின்றன எனக் கணக்கெடுப்பு எடுக்கவுள்ளோம்.

இந்தத் திட்டத்தின் மூலம் இவர்களுக்கு மருந்து, மாத்திரை வழங்குவதோடு மட்டுமின்றி அவர்களின் உடல்நிலை குறித்து கண்காணிக்கப்போம். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிசியோதெரபி, டயாலிசஸ் செய்வது போன்ற சிகிச்சைகள் வீடுகளுக்கே சென்று அளிப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விலக்கு

இந்தத் திட்டம் குறித்து அலுவலர்களிடம் பேசப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் 15 நாள்களுக்குள் தொடங்கிவைப்பார். தமிழ்நாட்டில் நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவிற்கு 83 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குழுவே தேவையில்லை என உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அதன் முடிவுகளை அறிவிப்பது சரியாக இருக்காது என்பதால் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மற்ற நடவடிக்கைகள் தொடரும். நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதற்குத்தான் எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டுவருகின்றன.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி தொடர்ச்சியாக அளிக்கப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டைப் போலவே தற்போதும் மிகச் சிறப்பாகப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கின்றனர். பயிற்சியில் எந்த இடையூறும் கூடாது எனக் கூறிக்கொண்டிருக்கிறோம்.

நீட் தேர்வு பயிற்சி

நடப்பு ஆண்டில் நேரடியாக நீட் தேர்வு பயிற்சி அளிக்கும் வாய்ப்புகள் இல்லாததால், ஆன்லைன் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் பயிற்சி அளித்துவருகிறோம். நீட் தேர்வே வேண்டாம் என்பதுதான் அரசின் கொள்கைத் திட்டமாகும்.

நீட் தேர்வு வேண்டாம் என்பதற்கு விலக்கு பெறுவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து அறிக்கைத் தயார் செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

2006ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வினை ரத்து செய்ததுபோல், நீட் தேர்வினை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மேலும் இந்தக் குழுவிற்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

உரிமைகளுக்கு மதிப்புண்டு

செவிலியர், இதர மருத்துவப் பணியாளர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் பணி நியமனம் செய்ய முடியாது.

கரோனா முடிந்தவுடன் முறையாகப் பரிசீலனை செய்யப்பட்டு நியமனங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். உரிமைகள் உறுதியாக மதிக்கப்படும்; அவசரப்படத் தேவையில்லை. பேரிடரில் இது குறித்து பேச நேரமில்லை, யாரையும் நாங்கள் விட்டுவிட மாட்டோம்" என்றார்.

இதையும் படிங்க:நீட் தேர்வுக்குத் தயாராவது தவறல்ல - சொல்கிறார் அமைச்சர் மா.சு.

ABOUT THE AUTHOR

...view details