சென்னை: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கரோனா தொற்று பரவல் கனிசமாக உயர்ந்து வருகிறது. இதுகுறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று (மார்ச் 21) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் கூற்றுப்படி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 200-க்கும் கீழ் இருந்த கரோனா பாதிப்பு தற்போது ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை பரிசோதித்ததில் பாதிப்பு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே H3N2 என்ற வைரஸ் பாதிப்பு இருந்தது. அதைத்தொடர்ந்து 1,586 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில், கடந்த 10 நாட்களில் மட்டும் 23,833 காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் மூலம் 10 லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7,500 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.
இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது 15 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகளை உறுதிப்படுத்தி கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கரோனா பாதித்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது.