சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கோடை கால வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தற்பொழுது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்க
வருகின்ற நாட்களில் உயர் வெப்ப தாக்கத்தின் காரணமாக தீவிர தலைவலி, மயக்கம், படபடப்பு, தசைப்பிடிப்பு, வலிப்பு, சுயநினைவு இழத்தல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொது மக்கள் உயர் வெப்பநிலையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உடலின் வெப்பம் தணியும் அளவிற்கு குடிநீரை அடிக்கடி பருக வேண்டும்.
அடிக்கடி தண்ணீர் குடித்து நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், வெளியிடங்களுக்கு செல்லும்போது பாட்டிலில் தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும், ORS கரைசலை பருகலாம். எலுமிச்சை, தர்பூசணி, கிர்ணி பழச்சாறுகள், மோர், லஸ்ஸி போன்றவற்றை பருக வேண்டும்.
நீர்ச்சத்து அதிகம் உள்ள திராட்சை, வெள்ளரி காய்களை எடுத்துக் கொள்ளவும். பருத்தியால் ஆன வெளிர் நிறம் கொண்ட மெல்லிய ஆடைகளை தளர்வாக அணிய வேண்டும். வெயிலில் செல்லும்போது காலணிகளை அணிந்து செல்ல வேண்டும். வேலை இல்லாத நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், திறந்த வெளியில் வேலை பார்ப்பவர்கள், இதய நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் வெப்ப அலைகளின் தாக்கத்தால் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உயர் வெப்பநிலையில் இருந்து பாதுகாத்துக் கொள்ள காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
மதுப்பிரியர்கள் வெயில் காலங்களில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். டீ, காபி, கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்களை தவிர்க்கவும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். அதிக புரதச்சத்து உள்ள உணவுகள் மற்றும் பழைய உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். உடல் வெப்பநிலை அதிகரிப்புடன் மயக்கம், குழப்பம் அல்லது வியர்வையற்று தோல் உலர்தல் போன்றவற்றில் ஏதாவது ஒரு அறிகுறியுடன் யாரையாவது கண்டால் உடனடியாக 108 அல்லது 104 என்ற அவசர உதவி எண்ணை அழைக்க வேண்டும்.