சென்னை:சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில், அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவரையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவர்கள் குழுவிற்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சை:அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” உலகம் முழுவதும் பேரிடர் காலம் என்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சுணக்கம் இருந்தது. பேரிடர் காலத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்தும் உறுப்பு தானம் பெறுவதில் பெறும் சிக்கல் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை விரைவுப்படுத்திட வேண்டும் எனவும், மூளைச்சாவு அடைந்தவரிடம் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும் வழிமுறைகளைக் கூறினோம்.
அதன்பின் தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு 93 நிமிடங்களில் இதயம் வரவழைக்கப்பட்டு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
அதேபோல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 19 வயது இளைஞரின் இதயம் பெற்றோர்கள் ஒப்புதலுடன் பெற்று, ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் செய்த இளையராஜா என்ற 30 வயதானவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
சிகிச்சை முடிந்தவரை நேரில் சந்தித்தோம். உடல் நலமுடன் உள்ளார். ஓமந்தூராரில் கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெறுகின்ற 9ஆவது இதய மாற்று அறுவை சிகிச்சையாக உள்ளது. தமிழ்நாட்டில் 36 மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 110 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, 36 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுத்த வேண்டியவை செயலாக்கம் பெற்றிருக்கிறது.
சரகர் உறுதிமொழியை ஏற்க முடியாது:முதியோருக்கான பொழுதுபோக்கு, காது கேட்காத குழந்தைகளுக்கு, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு செயல் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டங்கள் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் இருக்கிறது என்பதையும் ஆலோசிக்க உள்ளோம். மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு விவகாரத்தில் மதுரை கல்லூரி முதல்வர் காத்திருப்புப்பட்டியலில் வைக்கப்பட்டார்.