சென்னை:தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனைக்கும் இடையே, பாத மருத்துவம் - நீரழிவு நோய் அறுவை சிகிச்சை சேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் கையெழுத்தானது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தாலுக்கா மருத்துவமனைகளில், நீரிழிவு நோய் மற்றும் குருதிநாள பாதிப்புகளால் ஏற்படும் கால்பாத பாதிப்புக்களை கண்டறிந்து, ஆரம்ப நிலையில் கால் இழப்புக்களை குறைக்கும் திட்டம் (Foot Clinic / Stop Amputation) ரூ.1.05 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு, 3.10.2022 அன்று தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில், பாத மருத்துவ மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாத பாதிப்புகளை கண்டறிந்து, ஆரம்ப நிலை சிகிச்சை அளிப்பதன் மூலமாக கால் இழப்புகளை தடுக்கும் முன்மாதிரி திட்டத்தின் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 18 ஆயிரம் சர்க்கரை நோயாளிகளுக்கு, பாத பாதிப்புகளை கண்டறியும் முன்னெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே முதன்முறையாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் சிறப்பு வாய்ந்த திட்டமாகும். இதில் காலில் உணர்வு இழப்பின் காரணமாக ஏற்படும் புண்களை குணப்படுத்துவதற்கு, Surgical Offloading எனப்படும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்படி கடந்த செப்.28 அன்று, தஞ்சாவூரில் 14 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முன்னெடுப்பு, ஓராண்டு கால திட்டமாக செயல்பட மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக நீரிழிவு கால் அறுவை சிகிச்சை சேவைகள் (Diabetic Foot Surgery Services), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்படும், பொது அறுவை சிகிச்சைத்துறை மூலமாக தொடங்கப்பட உள்ளன.