சென்னை:இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமானவர் ம.பொ. சிவஞானம். இவரது 116ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன் 26) கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்நிலையில், சென்னை தியாகராய நகரிலுள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்துவைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மா. சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் வைரசால் ஒன்பது நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த மே மாதத்திலேயே இந்தத் தொற்று உருவாகியுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை, இதுதான் கரோனா மூன்றாவது அலையாக உருவெடுக்குமோ என்ற அச்சம் இருப்பதால், சென்னையில் பகுப்பாய்வு பரிசோதனை கூடம் அமைக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு, பணிகள் நடைபெற்றுவருகின்றன.
80,000 ஆக்சிஜன் படுக்கை வசதிகள்
இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் இயந்திரங்கள் வாங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 25 நாள்களுக்குள் பரிசோதனை மையம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.
தமிழ்நாட்டில் பொது நோய்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்புகளை, தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்.
தற்போதுவரை பரவல் இல்லை; இருப்பினும் தீவிரமாகக் கண்காணித்துவருகிறோம். கரோனா இரண்டாவது அலைக்காகப் பிரத்யேகமாக 80 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு லட்சம் படுக்கைகள் ஏற்கனவே தயாராகவுள்ளன. மூன்றாவது அலை வந்தாலும் அதைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தயாராகவுள்ளன.
தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த அமைச்சர்
கரோனா தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கறுப்புப் பூஞ்சை நோய் குறித்து நேற்று (ஜூன் 25) மருத்துவ வல்லுநர் குழு இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. டெல்டா பிளஸ் தொடர்பாக தொடர் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.
தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் இதனைத் தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அன்னபூரணி அம்மாள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாமை மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்து ஆய்வுமேற்கொண்டார்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த 'ஷாக்': இப்போது ஸ்டாலின் குட் புக்கில்...!