மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று (மார்ச் 11) மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தகுந்த இடைவெளி பின்பற்றுதல், கை கழுவுதல் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். முகக்கவசம் அணியாதவர்களிடம் முகக்கவசம் அணியுமாறும் வலியுறுத்தினார்.
மேலும் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது இந்த நிலை தமிழ்நாட்டிலும் அதிகரித்து வருகிறது. முன்பு கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500க்கு கீழ் இருந்த நிலையில், தற்போது 700ஐ நெருங்கியுள்ளது. மீண்டும் கடந்தாண்டு நிலையை கொண்டுவராமல் இருக்க இது ஒரு எச்சரிக்கை மணி.
தற்போது எப்படி மகாராஷ்டிரா தத்தளிக்கிறதோ, அதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில்லை. தாம்பரம், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கட்டாயமாக உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.