சென்னை: தென்மேற்குப் பருவமழை இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெய்துவருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலம் ஒட்டிய அரபிக் கடலோரப் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும், வட ஜார்கண்ட், பிகார் ஒட்டிய கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் நிலைகொண்டிருப்பதால் தென்மேற்குப் பருவமழை அந்தப் பகுதிகளில் நீடித்துவருகிறது.
இதையடுத்து அக்டோபர் ஆறாம் தேதி முதல் வடமேற்கு இந்தியா பகுதிகளிலிருந்து தென்மேற்குப் பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தில், தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் செய்தியாளரைச் சந்தித்துத் தெரிவித்தார்.
அதிகரித்த பருவமழை கணக்கீடு 17 விழுக்காடு அதிகரித்த பதிவு
அதில், “ஜூன் 1ஆம் தேதிமுதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில், தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 33 செ.மீ. ஆகும். ஆனால் வழக்கத்தைவிட 17 விழுக்காடு அதிக மழை பதிவாகியுள்ளது.
சென்னையின் இயல்பான மழை அளவு 46 செ.மீ. ஆகும். ஆனால் 50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 7 விழுக்காடு இயல்பைவிட அதிகம் மழை கிடைத்துள்ளது. இக்கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 14 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், ஒரு மாவட்டத்தில் இயல்பைவிட மிக அதிகமாகவும் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக பெரம்பூரில் 68 விழுக்காடு கூடுதல் மழை பதிவாகியுள்ளது. மேலும் திருப்பத்தூர், தேனி, பெரம்பலூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் 50 விழுக்காட்டிற்கு மேல் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு, காரைக்கால், விருதுநகர், தென்காசி, குமரி மாவட்டங்களில் 10 முதல் 15 விழுக்காடு இயல்பைவிட குறைவாக மழை பதிவாகியுள்ளது.
மீனவர்கள் கவனத்திற்கு
உள் தமிழ்நாடு பகுதிகளில் நிலவும் வளிமண்ட மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையைப் பொறுத்தவரை வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, புறநகர் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிழக்குத் திசையிலிருந்து காற்று வீசக்கூடும் சூழல் ஏற்படுவதால் மழை தொடரும். மீனவர்கள் அக்டோபர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் குமரிக்கடல், தென்மேற்குக் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து அண்மைக் காலங்களில் புயல்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், "1980 ஆண்டு முதல் பல்வேறு காரணங்களால் புயல்களில் எண்ணிக்கை சுமார் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 18 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!