சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அசிதேஷ், அவரது நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தனர்.
அச்சமயம் ரோந்துப் பணியில் இருந்த தலைமைக் காவலர் தினேஷ் குமார் சற்று குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. தினேஷ் குமார் அசிதேஷ், அவரது நண்பர்களை வீட்டிற்குச் செல்லுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அசிதேஷ் புகைபிடித்துக் கொண்டு காவலரை கிண்டலடித்து சிரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் தினேஷ் குமார் அசிதேஷை தாக்கியுள்ளார். பதிலுக்கு அசிதேஷும் தினேஷ் குமாரை தாக்கினார்.
இந்தத் தாக்குதலில் அசிதேஷுக்கு மூக்கிலும், தலைமைக் காவலருக்கு உள் காயமும் ஏற்பட்டு இருவரும் சிகிச்சைக்காக கஸ்தூரிபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன் பின்னர், காவல் துறையினர் அசிதேஷை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், அவர் இந்திய கடற்படையில் பணியாற்றுவது தெரியவந்தது.
மேலும் தன்னை தாக்கிய தலைமைக் காவலர், உடனிருந்த சக காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அசிதேஷ் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.