தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நிலக்கரி இறக்குமதி டெண்டரில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால் டெண்டர் ரத்து' உயர் நீதிமன்றம்

சென்னை: வெளிநாடுகளிலிருந்து சுமார் ரூ.1,330 கோடி மதிப்பிலான நிலக்கரி இறக்குமதி ஒப்பந்தப் புள்ளியில் (டெண்டர்) முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால், ஒப்பந்தப்புள்ளி முழுவதும் ரத்து செய்யப்படும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை செய்திகள்
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு நடந்தால் டெண்டர் ரத்துசெய்யப்படும்

By

Published : Mar 11, 2021, 8:31 PM IST

தமிழ்நாட்டில் மின் வாரியத்திற்கு ரூ.1,330 கோடி மதிப்பில் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டது. இந்த டெண்டரில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதால், வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தலைவர், மத்திய ஊழல் தடுப்பு ஆணையர், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆகியோர் அடங்கிய கூட்டுப் புலனாய்வுக் குழுவை அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமென மின் வாரிய முன்னாள் பொறியாளர் செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இம்மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு சாதகமாக இந்த டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இதே போன்று நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிக்கப்பட்டபோது, நிலக்கரிக்கு டன் ஒன்றிற்கு 13 டாலர் வீதம் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும், விதிகளை மீறி டெண்டர் அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்தில் டெண்டர் இறுதி செய்ததாகவும், இந்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை அளித்ததை மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் விஜய் ஆனந்த் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அதிக விலைக்கு நிலக்கரியை இந்தோனேசியாவில் இருந்து வாங்க, மாநில அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள், ஒரு சில நபர்களின் ஆதாயத்துக்காகப் பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது என கருத்து தெரிவித்தனர். மேலும், டெண்டர் முறைகேடு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும், மார்ச் 13 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்து, வழக்கு விசாரணையை மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details