புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றின் ஆவணங்களைக் கேட்பதற்கும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி அம்மாநிலத்தின் ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணை நிலை ஆளுநர் செயல்பட முடியாது எனக் கூறி, அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட தடை விதித்து உத்தரவிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்யாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த மனுவில், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து யூனியன் பிரதேச அரசு வழக்கு தொடராத நிலையில், தனி நபரான எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் வழக்கு தொடர உரிமையில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.