ஐடிஐ ஃபிட்டர் படிப்பை முடித்து, போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பெற்றுள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி கோவைசாமி என்பவர், தனக்கு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதில், "வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 22 ஆண்டுகள் கடந்தும், இதுவரை தனக்கு நேர்முக தேர்வுக்கு அழைத்து எந்த கடிதமும் வரவில்லை என்பதால், 248 நாட்கள் பயிற்சி பெற்ற தனக்கு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்கும்படி அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, "போக்குவரத்து கழகங்களில் உரிய முறையில் விளம்பரம் கொடுக்காமல் பணி நியமனங்கள் மேற்கொள்ளபடுவதாகவும், தேர்வு நடைமுறைகள் ஏதும் இல்லை என்றும் கூறி, அரசு பணியாளர் தேர்வாணையம் அல்லது வேறு அமைப்பின் மூலம் எழுத்து தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என 2014 ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.