சென்னை:தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள 5 ஆயிரத்து 329 டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 500 கடைகளை மூடுவது என தமிழக அரசு முடிவெடுத்து, குறைந்த அளவு விற்பனை நடைபெறக்கூடிய கடைகள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகில் உள்ள கடைகள், நீண்ட நாட்களாக பொதுமக்கள் ஆட்சேபனைக்கு உரிய இடங்களில் உள்ள கடைகள், நீதிமன்ற வழக்குகளில் உள்ள கடைகளை மூடுவது என கடந்த ஜூன் 21ம் தேதி விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை மண்டலத்தில் 138 கடைகள், கோயம்புத்தூரில் 78 கடைகள், மதுரையில் 125 கடைகள், சேலத்தில் 59 கடைகள் மற்றும் திருச்சி மண்டலத்தில் 100 கடைகள் என முதற்கட்டமாக 500 கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில், அரசு வகுத்த விதிகளின்படி கடைகள் மூடப்படவில்லை என்றும், மூடுவதற்கு வகுத்த விதிகளை மீறி, தங்கள் கட்டடங்களில் எந்த எதிர்ப்பும் விதிமீறல்களும் இல்லாத நிலையில் செயல்பட்டு வந்த கடைகள் மூடப்பட்டுள்ளதாகக் கூறி பாலமுருகன், அமல்ராஜ் மற்றும் நாகேஸ்வரி உள்ளிட்ட 24 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.