சென்னை: சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தளப் பேருந்துகளை இயக்க முடியும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகத்தில் 1,107 பேருந்துகளை கொள்முதல் செய்யும் டெண்டரில், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையிலான தாழ்தளப் பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி, வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இருவகையான பேருந்துகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக எவ்வாறு இயக்கப்படும் என்பது குறித்த, செய்முறை விளக்கத்தை தரும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரதச்சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (பிப்.6) மீண்டும் விசாரணைக்கு வந்தது.