தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டம்: டாஸ்மாக் நிர்வாகத்துக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டம் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் : டாஸ்மாக்கிற்கு ஒரு மாதம் அவகாசம்
காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் : டாஸ்மாக்கிற்கு ஒரு மாதம் அவகாசம்

By

Published : Jul 15, 2022, 10:55 PM IST

சென்னை: வன பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது.

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் அமல்படுத்த உத்தரவிட்டது. கடந்த விசாரணையின் போது, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது குறித்த திட்டத்தை வகுக்கும்படி டாஸ்மாக்குக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மலைவாசஸ்தலங்களில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மூலம் 71 சதவீத பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், பாட்டில்களை திரும்ப ஒப்படைக்காததால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை 6 கோடியே 81 லட்சம் ரூபாய் உள்ளது என டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதை பொறுத்தவரை, 5000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதால், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்க மூன்று மாத அவகாசம் வேண்டும் எனவும் டாஸ்மாக் தரப்பில் கோரப்பட்டது.

இதை ஏற்ப மறுத்த நீதிபதிகள், ஒரு மாதத்தில் இதுசம்பந்தமான திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும், மேற்கொண்டு அவகாசம் வழங்கப்பட மாட்டாது எனவும் கூறி, விசாரணையை ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதேசமயம், திரும்பப் பெறப்பட்ட காலி பாட்டில்களை அப்புறப்படுத்துவதற்கு பதிலாக மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்களே அந்த பாட்டில்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், பாட்டில்கள் திரும்ப ஒப்படைக்காததால் வசூலாகியுள்ள தொகை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Video - கழிவு நீரில் கீரையை கழுவும் வியாபாரி... கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details