சென்னை:திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவபாபு. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “ஜவ்வாது மலை அருகே உள்ள சின்னசமுத்திரம் கிராமத்தில் பிறந்த அம்மணி அம்மாள் தனது பெற்றோரின் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இருந்து விலகி, துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து அதனை மேற்கொண்டார்.
பின்னர், திருவண்ணாமலைக்குச் சென்ற அம்மணி அம்மாள் தீர்க்க முடியாத பல நோய்களை "திருநீறு" கொடுத்து தீர்த்ததாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை ஆலயத்திற்கு அருகே இருந்து தனது துறவு வாழ்க்கையை மேற்கொண்ட அம்மணி அம்மாள் கோயிலின் வடக்கு கோபுரத்தை மைசூர் மகாராஜா உதவியுடன் நன்கொடை மற்றும் யாசகத்தால் கிடைத்த பணத்தின் மூலம் நிதி திரட்டி கோபுரத்தை கட்டினார். இதனால் அந்த கோபுரம் அம்மணி அம்மாள் கோபுரம் என அழைக்கப்படுகிறது.
கோபுரம் கட்டுவதற்கான பொருட்களைச் சேர்த்து வைக்க பயன்பட்ட 25ஆயிரத்து 247 சதுர அடி நிலத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும், சேவையும் வழங்கப்பட்டது. அம்மணி அம்மாள் நினைவாக செயல்பட்டு வந்த மடத்தை டி.ஏ வையாபுரிக்கு பிறகு அவரது குடும்பத்தினர் நிர்வாகிக்காததால், சின்னதம்பி பிள்ளை என்பவர் ஆக்கிரமித்து உரிமை கோரினார்.
இதை எதிர்த்து 2002 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த இடத்தை வையாபுரி குடும்பத்தினருடன் சேர்ந்து அறநிலையத்துறை நிர்வகிக்க உத்தரவிட்டது. ஆனால், அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க தவறியதால், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றக்கோரி 2015 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.