கரோனா ஊரடங்கில் பொதுமக்கள், தொழிலாளர்களின் பிரச்னைகளை மனுவாக பெற்று அவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு திமுகவினர் அளித்து வந்தனர். அதுதொடர்பாக அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை சந்தித்தபோது மிரட்டல் விடுத்துள்ளார்.
அதனால் அன்பழகன் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி மீது புகார் அளித்தார். அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியரை மிரட்டிய வழக்கில் தனக்கு முன் பிணை வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான வழக்கு விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
அதில் மனுதாரர் தரப்பில், எம்.எல்.ஏ. நிதியை பயன்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகவும், மக்களின் பிரதிநிதி என்ற முறையிலேயே அவரைச் சந்தித்ததாகவும் வாதிட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து எந்த ஒரு மிரட்டலும் மாவட்ட ஆட்சியருக்கு விடுக்கவில்லை, பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதை வைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது, இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு" எனத் தெரிவிக்கப்பட்டது.