சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் ஸ்வாதி கடந்த 2016ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டபோது, அங்கு மின்சார வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார்.
தன் மகன் மீது எந்த தவறும் இல்லை, ராம்குமார் அப்பாவி எனவும், இது தொடர்பான மனித உரிமை ஆணையம், தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய விசாரணைகள் நிலுவையில் உள்ளது எனவும் ராம்குமாரின் தந்தை பரமசிவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், தன் மகனின் மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில், இச்சம்பவங்களை மையமாக வைத்து இயக்குநர் ரமேஷ் என்பவர் ‘நுங்கம்பாக்கம்’ என்ற தலைப்பில் திரைப்படத்தை எடுத்துள்ளார்.
இப்படத்தை வெளியிட்டால் விசாரணை பாதிக்கும், உண்மை நிலை வெளியில் தெரியாத நிலை ஏற்படும் என்பதால் இந்த திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரிடம் விசாரணை நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.