சென்னை காமராஜர் சாலையில் போர் நினைவு சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகாலிங்கத்தை கஞ்சா வைத்திருந்த புகாரில், டிசம்பர் 6ஆம் தேதி ஐஸ் ஹவுஸ் காவல் ஆய்வாளர் சரவணன் விசாரணைக்கு அழைத்துச்சென்று, கைது செய்துள்ளார். இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாலிங்கத்தை ஆஜார்படுத்தி, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவரது மனைவி பிரபா டிசம்பர் 8ஆம் தேதி சிறையில் சென்று பார்த்தபோது, தனது கணவரின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறிய நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி மகாலிங்கம் மரணமடைந்துவிட்டதாக பிரபாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபா தொடர்ந்துள்ள வழக்கில், கணவர் மகாலிங்கத்தை உரிய விசாரணை செய்யாமல் ஆய்வாளர் சரவணன் அழைத்து சென்று அடித்து சித்திரவதை செய்ததால்தான் இறந்துள்ளதாகவும், ஆனால் சந்தேக மரணம் என்ற பிரிவில் மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கணவரின் உடலுக்கு மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும், சந்தேக மரணம் என பதிவான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும், இடைக்கால இழப்பீடாக ரூ. 50 லட்ச வழங்க உத்தரவிட வேண்டும் என இடைக்கால கோரிக்கைகள் வைத்துள்ளார்.