தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களில் தென்னிந்திய திருச்சபையின் 24 திருச்சபைகள் உள்ளன. இதில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருநெல்வேலி திருச்சபையும் ஒன்று. திருநெல்வேலி திருச்சபைக்கு 2017ஆம் ஆண்டு ஜான் கென்னடி உள்ளிட்ட 17 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.
இந்நிலையில் தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயரை தேர்ந்தெடுக்க திருச்சியில் ஜனவரி 11 முதல் 14ஆம் தேதி வரை சினாடு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம பேராயரை தேர்வு செய்ய நடைபெறும் இந்தக் கூட்டத்தில் திருநெல்வேலி திருச்சபையின் பிரதிநிதிகளை அனுமதிக்கவில்லை எனக் கூறி, ஜான் கென்னடி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கூட்டத்தில் தாங்கள் கலந்துகொள்வதை தடுக்கக் கூடாது என கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, பிரதம பேராயரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் திருநெல்வேலி திருச்சபை பிரதிநிதிகள் 17 பேரும் கலந்துகொள்ள அனுமதித்து உத்தரவிட்டார்.