சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. ஆனால் விவசாயிகள் இன்னும் ஏழைகளாவே உள்ளனர்.
விவசாயிகள் விளைவிக்கும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலமாக விற்பனைக்கு எடுக்கப்படுகிறது. நெல் விவசாயம் அதிகமாக செய்யப்படும் டெல்டா பகுதிகளில், நெல்லை விற்க 10, 15 நாள்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இதனால் நெல் முழுவதும் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் சாலையில் கிடக்கும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளைக் காக்க தமிழ்நாடு முழுவதும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கவும், விவசாயிகளிடமிருந்து நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும், விவசாயிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.