சென்னை: 1990 க்கு பிறகு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அறிமுக பாடல்களில் ஒலித்த குரல் என்றால், அது ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியன் என்னும் எஸ்.பி.பியின் குரலாகத் தான் இருக்கும். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தனது குரலால் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய எஸ்பிபி, கிட்டத்தட்ட 16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
‘ஆயிரம் நிலவே வா..’ தொடங்கி ‘அண்ணாத்த’ வரையிலும் அவரது குரலுக்கு தலைமுறை கடந்த ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும், 60களில் தொடங்கிய இவரது திரைப்பட பாடலின் பயணத்தில், எம்.எஸ்.வி. முதல் அனிருத் வரையிலான இசையமைப்பாளர்களின் படங்களிலும் பாடியுள்ளார்.
காலம் தாண்டிய இசையமைப்பாளர்களோடு... தேனிசை தென்றல் தேவாவின் இசையில், ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘தண்ணி குடமெடுத்து...’ என்ற பாடலை அந்த காலக்கட்ட இளசுகளின் காதல் காவியமாக உருவெடுக்க வைத்தவர், எஸ்.பி.பி. அதேபோல் ஏஆர்.ரகுமானின் முதல் படமான ‘ரோஜா’ படத்தில் எஸ்.பி.பி பாடிய ‘காதல் ரோஜாவே...’ என்னும் பாடல், இன்று வரை ஆகச்சிறந்த காதல் பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது. 80களில் இளையராஜா இசையில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
குறிப்பாக ‘சகலகலா வல்லவன்’ படத்தில் எஸ்பிபி பாடிய ‘இளமை இதோ இதோ..’ என்ற பாடல்தான் தற்போது வரையிலும் புத்தாண்டு பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அப்படியே 1990-களுக்குள்ளே நுழைந்தால் தேவா தொடங்கி ஏஆர்.ரகுமான், எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி, வித்யாசாகர், பரத்வாஜ், பரணி, சவுந்தர்யன் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களுக்கும் மறக்க முடியாத ஏராளமான வெற்றிப் பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் முதல் படமான ‘அரவிந்தன்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஈரநிலா’ என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளது. தொடர்ந்து கார்த்திக் ராஜா, ஹாரீஸ் ஜெயராஜ், டி.இமான், விஜய் ஆண்டனி, ஜிவி.பிரகாஷ், அனிருத், ஶ்ரீகாந்த்தேவா உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையிலும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
கின்னஸ் சாதனையாளர் எஸ்பிபி: தான் பாடிய காலம் வரையிலும் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், ரஜினியின் அறிமுகப்பாடல் எப்போதுமே எஸ்பிபிதான் என்றளவு மாறிவிட்டது. ரசிகர்களும் அதையேத்தான் விரும்பினர். ‘வந்தேன்டா பால்காரன்.., ஒருவன் ஒருவன் முதலாளி.., தேவுடா தேவுடா.., என்பேரு படையப்பா.., நான் ஆட்டோக்காரன்.., மரணம் மாஸ் மரணம்.., அண்ணாத்த..’ என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்த பாடல்களில் எல்லாம் ஒருவித குறும்பும் எஸ்பிபி குரல்வளையோடு தவழும். கேட்கின்ற நமக்கும் அதுவொரு அலாதி இன்பத்தை ஏற்படுத்தும். காதல், நட்பு, சோகம், மகிழ்ச்சி என அத்தனை உணர்வுகளையும் தனது குரலால் நம்முள் கடத்தியவர் இந்த மந்திரவித்தைக்காரர் எஸ்பிபி.