சென்னை:புது வண்ணாரப்பேட்டை பூண்டிதங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் மைதீன் (37). இவர் டிரை புரூட்ஸ் சில்லறை வியாபாரம் செய்து வருகிறார். அதேநேரம் ஹவாலா பணத்தை கமிஷன் அடிப்படையில் பெற்று, சம்மந்தப்பட்ட நபர்களுக்கு வங்கிக் கணக்குகளில் ஏடிஎம் மூலமாக வைப்புத்தொகை செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி வழக்கம்போல கொத்தவால் சாவடியைச் சேர்ந்த நஜீம் என்பவர் கொடுத்த 9 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை, 7 வங்கி ஏடிஎம்களில் செலுத்த மைதீன் சென்றுள்ளார். இதற்காக சென்ட்ரல் மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள ஏடிஎம்களில் 3.78 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை செய்துள்ளார்.
பின்னர் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் முகத்தைத் துணியால் மறைத்தபடி அணிந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் மைதீனை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி, மைதீனிடம் இருந்த 5 லட்சம் ரூபாயைப் பறித்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து இதுதொடர்பாக மைதீன், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் காவல் துறையினர் ஆய்வு செய்யத் தொடங்கினர். ஆனால் முதலமைச்சரின் வீடு உள்ள தேனாம்பேட்டை பகுதியில் போலீசார் சார்பாகப் போடப்பட்ட சிசிடிவி கேமராக்கள் பெரும்பாலானவை வேலை செய்யாததால், அந்த பகுதிகளில் உள்ள கடைகளிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளை கும்பல், குறுகிய சந்துகளில் சென்று தேனாம்பேட்டையைப் பல முறை சுற்றிவிட்டு, பின்னர் பிரிந்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கடந்த 8 நாட்களில் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்ததில், புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி ஜான்ஜெய்சிங் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.