சென்னையிலிருந்து துபாய் செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை 5.30 மணிக்கு புறப்படத் தயாரானது. அதில் பயணம் செய்யவந்த பயணிகளைச் சுங்கத் துறையினர் பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனா்.
அப்போது சென்னை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த மன்சூா் அலிகான் (27), யாகாலிக் (68), தமீம் அன்சாரி (48), முகமது உசேன் (30), யூசுப் (67), அப்துல் ரகுமான் (38) ஆகிய ஆறு போ் ஒரு குழுவாகச் சிறப்பு அனுமதி பெற்று இந்த விமானத்தில் துபாய் செல்ல வந்தனா். அவா்கள் மீது சந்தேகமடைந்த சுங்கத் துறையினர் அவா்களை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினா்.
இதனால் அவா்களைத் தனி அறைகளுக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டபோது, அவர்கள் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக மறைத்துவைத்திருந்த அமெரிக்க டாலா், சவுதி ரியால் கரன்சிகள் இருந்ததைக் கண்டுபிடித்தனா். அத்தோடு அவா்களின் கைப்பைகளிலும் கரன்சிகள் இருந்தன. சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கரன்சிகள் அனைத்தையும் சுங்கத் துறையினா் கைப்பற்றினா்.