சென்னை: சென்னை மாநகராட்சியில் இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையோரங்களில் கூடாரம் அமைத்தும், சாலையோரப் பகுதிகளில் படுத்துறங்கி தினக்கூலிகளாகப் பணியாற்றியும் வருகின்றனர்.
ஆதரவற்ற 45 வயதிற்கும் மேற்பட்ட பலரும் சாலையோரப் பகுதிகளில் தங்கிவருகின்றனர். இவர்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு இருக்குமா? என்பது தெரியவில்லை. சென்னை மாநகராட்சி சார்பில் இவர்களுக்குப் போதிய ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் 45 வயதிற்கும் மேற்பட்ட 22 லட்சம் பேரில் இதுவரை ஒன்பது லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தாங்களே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வரவில்லை. சிறப்பு முகாம் அமைத்து அவர்களுக்கு உடனே தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட 10 லட்சம் பேரில் ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே இரண்டாம் தவணை எடுத்துக்கொண்டனர்.
விழிப்புணர்வு தேவை
மாநகராட்சியில் சாலையோரம் தூங்குபவர்களுக்கு முறையான தங்கும் விடுதிகள் இருந்தாலும், பணிநிமித்தமாக சாலையோரங்களில் தங்கிவிடுகின்றனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 25 பேர் தங்கும் வகையில் தங்கும் விடுதி கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.