சென்னை: அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை வளர்க்கும் விதமாக, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011-12ம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு திட்டத்தின்கீழ் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், 2018-19 மற்றும் 2019-20ம் கல்வியாண்டு முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக இலவச லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. சர்வதேச அளவில் லேப்டாப்பில் பயன்படுத்தப்படும் 'சிப்' தட்டுப்பாடு காரணமாக இலவச லேப்டாப் வழங்க முடியவில்லை எனவும், ஆனால் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை அரசு நிறுத்தாது என்றும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு 2018-19 மற்றும் 2019-20ம் கல்வியாண்டில் லேப்டாப் வழங்குவதற்கு 949.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான டெண்டர் விடப்பட்டு, கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய லேப்டாப்கள், திமுக ஆட்சிக்கு வந்தப்பின்னர் கல்வித்துறையின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.