சென்னை:கரோனா தொற்றின் காரணமாக உலகமே ஸ்மார்ட் கருவிகளான கம்ப்யூட்டர், மொபைல் போன், டிவி போன்றவற்றில் பணியை அதிகளவில் செய்யத்தொடங்கி உள்ளன.
இதில் கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதற்கு முக்கியமாக மவுஸ் தேவைப்படுகிறது. தகவல் தொழில் நுட்பத்துறையிலும், பிபிஓ போன்ற நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்களும் அதிகளவில் மவுஸ் பயன்படுத்தி வருகின்றனர்.
அதிகரித்த மவுஸ் பயன்பாடு
மேலும் பல்வேறு திறன்களுடன் பணியாற்றி வருபவர்களும், எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்துகளினால் உடலில் கை, கால்களில் ஏற்படும் பாதிப்பு, முதுகு தண்டுவடப் பாதிப்பு ஏற்பட்டால் அதன் பின்னர் கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியாத நிலையை அடைகின்றனர்.
இதுபோன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும், ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகளாக உள்ளவர்களும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நோக்கில், சென்னை ஐஐடி ஆராய்ச்சி நிறுவனத்தில் மவுஸ்வேர் என்ற கருவியை டெக்ஸ்ட்ரோவர் டிசைவஸ் நிறுவனத்தின் நிறுவனர் பிரவீன்குமார் என்ற 23 வயது இளைஞர் உருவாக்கி உள்ளார்.
புதிய கருவி
இது குறித்து பிரவீன்குமார் கூறியதாவது, 'சென்னையில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்டரானிக் கம்யூனிகேஷன் பிரிவில் படிக்கும் போது, கம்ப்யூட்டரில் விளையாட்டைத் தொடர்ந்து மவுஸ் கொண்டு விளையாடும்போது கைகளில் வலி ஏற்பட்டது.
மேலும் தனது நண்பருக்கு ஏற்பட்ட விபத்தினால் கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியாத நிலையில் சிரமப்பட்டாா்.
கம்ப்யூட்டரில் வேலை செய்ய மவுஸ் தேவையில்லை அப்போது, கம்ப்யூட்டர் பயன்படுத்துவதற்கு விளையாட்டிற்குப் பயன்படுத்திய கருவியை மேம்படுத்தி பயன்படுத்தத் தொடங்கினேன்.
மேலும் சென்னை ஐஐடி நடத்திய புதியக் கண்டுபிடிப்புக்கான போட்டியிலும், கூகுள் நடத்திய போட்டியிலும் கலந்துக் கொண்டு வெற்றிபெற்றேன்.
அதன் பின்னர் சென்னை ஐஐடி ஆராய்ச்சி நிறுவனத்தில், என்னை அழைத்து இந்தக் கருவியை வணிகப் பயன்பாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கக் கூறினர். அதன்படி கருவி தற்பொழுது முழுவதும் இந்திய தொழில் நுட்பத்தில் தயார் செய்து வடிவமைத்துள்ளோம்.
விரைவில் சந்தையில்
இந்தக் கருவியைக் கொண்டு எளிதில் கம்ப்யூட்டரை இயக்க முடியும். புதிய தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்டுள்ள கருவி சிறிய பாக்ஸ் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை தலையில் மாட்டிக் கொண்டு மவுஸிற்குப் பதில் கம்ப்யூட்டர் திரையை செயல்பட வைக்க முடியும்.
இதற்காக தயாா் செய்யப்பட்டுள்ள யுஎஸ்பி ஸ்டிக்கை கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் பொருத்த வேண்டும். அதற்காகத் தனியாக எந்தவிதமான சாப்ட்வேரையும் பொருத்தத் தேவையில்லை. அதேபோல் கை மற்றும் காலினால் இயக்கும் வகையிலும் மவுஸின் பகுதியை தயார் செய்துள்ளோம்.
மேலும் கம்ப்யூட்டரில் டைப் செய்ய முடியாதவர்கள் பேசினாலே டைப் ஆகும் வகையில், ஸ்பீச் டூ டெக்ஸ்ட் (Speech To Text) என்ற முறையைப் பயன்படுத்தி உள்ளோம். இதன் மூலம் ஆங்கிலம் மட்டும் இல்லாமல் பிற மாெழிகளான தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்டப் பிற மாநில மொழிகளிலும் பேசினாலும் அது எழுத்து வடிவில் மாறிவிடும்.
வரும் காலத்தில் பல்வேறு புதிய செயல்களையும் செய்யும் வகையில் மேலும் மேம்படுத்த உள்ளோம்.
தற்பொழுது தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுபவர்கள் அதிகளவில் மவுஸ் பயன்படுத்துவதால் கைகளில் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, அதனைக் குறைக்கும் வகையில் இதனைப் பயன்படுத்த முடியும். எங்களின் புதியக் கண்டுபிடிப்பினை இரண்டு மாதங்களில் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: SMAT Champions 2021-22: தமிழ்நாடு அணிக்கு ஸ்டாலின் வாழ்த்து