பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒன்றின் மீது தீராக் காதல் இருந்தே தீரும். சிலருக்கு புத்தகமாக இருக்கலாம், சிலருக்கு ஆடையாக இருக்கலாம். இப்படியிருக்க, சிலரின் காதல் நம்மால் நம்பவே முடியாத அளவுக்கு விசித்திரமாக இருக்கும். அதில் ஒன்றுதான் பெண்களின் கூந்தலின் மீது 'ஆண்கள்' சிலருக்கு வரும் காதல்.
சங்க காலத்தில் பெண்களின் கூந்தலை 'கார்குழல்' (கருமையான கூந்தல்) என்ற உவமையைக் கொண்டு வர்ணிக்காத புலவர்களே இல்லை எனலாம். அதன் தொடர்ச்சியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சம காலத்திலும், கவிஞர்களும் பாடலாசிரியர்களும் பெண்களை வர்ணித்து எழுதும் கவிதைகளில், கூந்தலை வர்ணிக்காமல் அக்கவிதை முழுமைப் பெறாது. பல நூற்றாண்டுகளாக ஆண்களுக்கும் பெண்களின் கூந்தலுக்கும் உள்ள பந்தம் அக்கூந்தலைப் போலவே ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது.
பெண்களும் இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் இல்லை. அவர்களுக்கும் கூந்தல்தான் எல்லாமே. தன் சக தோழியின் கூந்தல் ஒரு இன்ச் அதிகமானாலும் அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. அந்தளவிற்கு கூந்தல் காதல் கொண்டவர்கள் பெண்கள். 'திருப்பாச்சி' படத்தில் விஜய்யின் தங்கை தன் கூந்தலை விட தோழியின் கூந்தல் நீளம் அதிகமாக இருப்பதாக சொல்லும்போது, தன் அண்ணன் விஜய்யிடம் கூறி அவளுக்குத் தெரியாமல் வெட்டச் சொல்வாள். ஆனால், விஜய்யோ அவள் தோழியின் அம்மாவின் கூந்தலை வெட்டிவிடுவார் என்பது ஒரு 'முடி'விலா கதை.
கார்குழல் காதலால் நேர்ந்த விபரீதம்:
இப்படிப்பட்ட ஒரு 'கார் குழல்' கொண்ட மணப்பெண்ணுக்கும், முன் கூறியது போல கூந்தல் காதலன் ஒருவருக்கும் இடையே நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தைத் தான் நாம் பார்க்கப் போகிறோம். இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்யப்போகும் மணப்பெண் ஒருவர், தன் சகப்பயணிகளுடன் சென்னையில் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். ஆட்டோ பூவிருந்தவல்லியிலுள்ள என்.எஸ்.கே. நகர் சந்திப்பை நெருங்கும்போது, அப்பெண்ணின் கூந்தல் எதிலோ சிக்கியது போல் உணர்ந்திருக்கிறார். உடனே, தன் கூந்தலை வருட முற்பட்டார்.