தமிழ்நாடு

tamil nadu

திமுகவினர் மீதான குட்கா வழக்கு: உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி!

By

Published : Aug 25, 2020, 11:06 AM IST

Updated : Aug 25, 2020, 11:17 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்ததாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Gutka infringement case
Gutka infringement case

தமிழ்நாட்டில் பான், குட்கா உள்ளிட்டப் பொருட்கள் கடந்த 2016ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் அப்பொருட்கள் முழுவதுமாக தடை செய்யப்படவில்லை, இன்னும் அவை தாராளமாக கிடைக்கின்றன என்பதை நிரூபிக்க திமுக எம்எல்ஏக்கள் சிலர், கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு அப்பொருட்களைக் கொண்டு வந்தனர்.

இதையடுத்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது உரிமை மீறல் பிரச்னையை அதிமுக கொண்டு வந்தது. திமுகவின் செயலைக் கண்டித்த சபாநாயகர் தனபால், இந்த விவகாரத்தை சட்டப்பேரவை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைத்தார்.

இதை விசாரித்த சட்டப்பேரவை உரிமைக் குழு 21 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏபி சாஹி, நீதிபதி செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு இன்று (ஆக. 25) வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை காலை 11 மணியளவில் வாசித்தனர்.

அப்போது, 'குட்காவை சட்டப்பேரவைக்கு கொண்டு வந்ததாக திமுகவினருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்யப்படுகிறது. உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால், மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும்' என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு வழங்கினர்.

இதையும் படிங்க...புதுச்சேரியில் இன்று தளர்வில்லா ஊரடங்கு!

Last Updated : Aug 25, 2020, 11:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details