சென்னை: காரில் குட்கா கடத்தலில் ஈடுபட்டு போலீசாரிடமிருந்து தப்பியோடிய கும்பல் மீண்டும் நேற்று கடத்தலில் ஈடுபட்ட போது சிக்கியுள்ளனர். இவர்களிடமிருந்து 430 கிலோ குட்கா, 3 லட்ச ரூபாய் பணம் மற்றும் 3 கார்களை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை பகுதியில் புகையிலை பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருபவர்கள், அதனை தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று அதிகாலை வானகரம் சோதனை சாவடி அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: சுங்கத்துறை தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட உ.பி இளைஞர் கைது - வடமாநிலத்தைச் சேர்ந்த 28 பேருக்கு பிணை!
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த 2 கார்களை காவல்துறையினர் நிறுத்தி உள்ளனர். அப்போது 2 கார்களில் வந்த 3 நபர்களும் தப்பியோட முயன்றபோது காவல் குழுவினர் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் 2 கார்களையும் சோதனை செய்தபோது காருக்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சட்டவிரோதமாக குட்கா புகையிலை பாக்கெட்டுகள் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (28), பஜன்லால் (24), பரசராம் (28) ஆகிய 3 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30.5 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 3 லட்சத்து 25 ஆயிரத்து 660 ரூபாய் பணம், 2 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 நபர்களும் வெளி மாநிலத்தில் இருந்து குட்கா புகையிலை பாக்கெட்டுகள் கடத்தி வந்து, சென்னையில் விநியோகம் செய்து வந்தது தெரியவந்தது. இவர்கள் கடந்த 11-ஆம் தேதி அன்றே 400 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகளை காரில் கடத்தி வந்தபோதே, மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மடக்கியுள்ளனர். அப்போது அவர்கள் காரை விட்டுவிட்டு தப்பிச் சென்ற நிலையில் இன்று நடந்த சோதனையில் சிக்கியுள்ளனர்.
இதையும் படிங்க: சொகுசு காரில் 4,000 மதுபாட்டில்கள் கடத்தல்.. 30 கி.மீ சேஸிங் செய்து மடக்கிய காவல்துறை!