தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்கா முறைகேடு வழக்கு: குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது! - குட்கா முறைகேடு வழக்கு

குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

gutka scam
gutka scam

By

Published : Sep 7, 2021, 10:26 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் குட்கா, புகையிலை, பான் மசலா போன்றவை 2013ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட நிலையில், சந்தையில் தொடர்ந்து விற்பனை ஆகி வந்தது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தமிழ்நாட்டில் கிடைப்பதில் அமைச்சர்களுக்கும், மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் வழக்கு, சென்னை 8வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சிபிஐ-யை தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் 2018ஆம் ஆண்டு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த வழக்கிற்கான குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் அமலாக்கத் துறை கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்தது.

அமலாக்கத் துறை உதவி இயக்குனர் தயாரித்துள்ள இந்த குற்றப்பத்திரிக்கையில், குட்கா சட்டவிரோத விற்பனை விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார், கலால் வரித்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், கிடங்கு உரிமையாளர் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், ஆந்திராவை சேர்ந்த அருணா குமாரி, சூரிய புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 27 பேருக்கு எதிராகவும், 3 நிறுவனங்களுக்கு எதிராகவும் ஆதாரங்கள் இடம்பெற்றிருந்தன.

அதிகார துஷ்பிரயோகம், கூட்டுசதி, சட்டவிரோத அன்பளிப்பு கேட்பது உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்கு பதிந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2013 மே மாதம் முதல் 2016 ஜூன் மாதம் வரை சட்டவிரோத விற்பனை மூலமாக 639 கோடியே 40 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகவும், அந்த பணத்தின் மூலம் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் அசையும் அசையா சொத்துக்களை தங்கள் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் வாங்கியது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதற்காக மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்துள்ளதால் 30 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி,எம்.எல்.ஏ களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேரும் இன்று நீதிபதி ரவி முன்பு ஆஜர் ஆனார்கள். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 21ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details