சென்னை: அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள், நகர் நல அலுவலர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் பொது சுகாதார இயக்குநரகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
ஆய்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 106 அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் இருக்கின்றன.
8,713 துணை சுகாதார நிலையங்கள் இருக்கின்றன. 1500க்கும் மேற்பட்ட கட்டடங்கள் வாடகைக்கும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் பழமை அடைந்து பயனற்ற வகையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டடங்களை சீரமைப்பதற்கு நிதிபெற்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்படுகிறது.
மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் ''நமக்கு நாமே'' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டடம் கட்ட வேண்டும். ''மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்'' தொழிற்சாலைகளுக்கும் விரிவுப்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாய்க்கடி, பாம்புக்கடி மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இருப்பதையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு மாரடைப்பைத் தடுக்கும் பொருட்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களிலும் இருப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. மாரடைப்பு போன்ற சிறிய அறிகுறி தென்பட்டவுடன் தருவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாரடைப்பு மருந்து கடந்த ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ASV என்று சொல்லப்படும் பாம்புக்கடி மருந்தும், ARV என்று சொல்லப்படும் நாய்க்கடி மருந்தும் கையிருப்பு உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் பாம்புக்கடி மருந்து தேவைக்காக நகரத்திற்கு வரும் தேவை ஏற்படாத விதம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருந்து தரப்படுகிறது.
இந்த ஆண்டு மாரடைப்பினால் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்கும் பொருட்டு இதய பாதுகாப்பு மருந்துகள் (Emergency Loading Dose) அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் இம்மருந்து தரப்படவிருக்கிறது. மேலும் அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் மருந்து இருப்பினை உறுதிப்படுத்திட அனைத்து மாவட்ட நல அலுவலர்கள், அனைத்து துணை சுகாதார நிலையங்களிலும் இம்மருந்து இருக்கிறதா என்று உறுதி செய்யப்படுகிறது.
2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரூ.10.17 கோடி இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் அம்மருத்துவமனைகளில் மருத்துவ சேவையைப் பாதுகாப்பாக செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதில் பணியாற்றும் பணியாளர்கள், அவர்களுடைய பணிநேரம், பணியிருப்பு போன்றவைகளை கண்காணிப்பதற்கும் மேற்கொள்ளவிருக்கிறது.