சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூர் - பெரியபாளையம் நெடுஞ்சாலை, நத்தம்மேடு பகுதியில் திருநின்றவூர் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் நேற்று இரவு (ஆக.28) காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வேகமாகவந்த ஜீப்பை காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயன்றபோது, அந்த ஜீப் நிற்காமல் காவல் துறையினர் மீது மோதி கொல்ல முயற்சி செய்தது.
இதில், காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் உள்பட அனைவரும் நுாலிழையில் உயிர் தப்பினர். இதனையடுத்து, அந்த ஜீப்பை விரட்டி மடக்கிப் பிடித்த காவல் துறையினர், ஜீப்பை சோதனை செய்தபோது உள்ளே இரு மூட்டைகளில் 30 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, ஜீப்புடன் குட்கா பொருள்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஓட்டுநர் உள்பட 2 பேரை பிடித்து திருநின்றவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில், பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து இருவரிடம் விசாரணை நடத்தினர்.